ஊரு விட்டு ஊரு சென்று 10க்கு 10 அறையில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்ணை காதல் பட பாணியில் தேடிக் கண்டுபிடித்த உறவினர்கள் , அந்தப்பெண்ணை ஊருக்கு அழைத்துச்சென்று இறந்துவிட்டதாக கூறி சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக காதல் கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அடுத்த 3 நாளில் தஞ்சாவூரில் நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில் கலகலப்போடு திருப்பூரில் திருமணம் செய்துக் கொண்ட காதல் ஜோடி இது தான்..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பிற்காக திருப்பூருக்குச் சென்ற நவீன் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு காதலி ஐஸ்வர்யாவையும் திருப்பூருக்கு வரவழைத்து வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார் நவீன்.
ஊரில் பயந்து பயந்து காதலித்த ஜோடியினர் திருப்பூரில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் காதலை தொடர்ந்ததோடு திருமணமும் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் கடைசி நாளில் அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் நண்பர்கள் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டனர் ஜோடியினர்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, நவீனின் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஐஸ்வர்யாவின் பெற்றோர் பார்வைக்கும் சென்றுள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
தம்பதியரை தேடிக் கண்டுபிடித்து போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், போலீஸாரை ஒருவாறாக சரிகட்டி விட்டு தங்கள் மகள் ஐஸ்வர்யாவை மட்டும் தங்களுடன் சொந்த ஊரான பூவாலூருக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர் பெண்ணின் பெற்றோர்.
ஆனாலும், மனைவியை பிரிய மனமில்லாத நவீன், மோட்டார் சைக்கிளிலேயே அந்த காரை பின்தொடர்ந்து ஊருக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
ஊருக்கு வந்த பிறகு ஐஸ்வர்யாவிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அவர் ஜனவரி 3 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சடலத்தை அங்குள்ள சுடுகாட்டில் எரித்து இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்ல முயன்ற நவீனை, அவரது உறவினர்கள் தடுத்ததைத் தொடர்ந்து அவர் வாட்டாத்திக் கோட்டை போலீஸில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை ஏ.எஸ்.பி நேரடியாக விசாரித்துவரும் நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தலைமறைவான பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.