டெலிகிராம் ஆப் மூலம் நட்பாக பழகி வசதிபடைத்தவர்களை காதல் வலையில் வீழ்த்தி தனிமையான இடத்திற்கு வரவழைத்து லட்சக்கணக்கில் பணம் கறந்த மும்பை மாடல் அழகி தலைமையிலான 4 பேர் கும்பல் போலீசில் சிக்கி உள்ளது.
கையில் பூனைக்குட்டியுடன் இருக்கும் இந்த மாடல் அழகியை நம்பிச்சென்றவர்கள் தான் பொறியில் சிக்கிய எலிகளாக லட்சங்களை பறிகொடுத்து தவிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..!
பெங்களூருவில் வசிக்கும் வசதிபடைத்த இளைஞர் ஒருவர் புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், டெலிகிராமில் மாடல் அழகி ஒருவருடன் லைவ் சாட்டிங் செய்ததாகவும் அதன் தொடர்ச்சியாக அவரை நேரில் சந்திக்கச்சென்ற போது அவருடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி ஒரு பல லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டதாக கூறி இருந்தார்.
அந்த இளைஞர் கொடுத்த செல்போன் எண்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஹனிடிராப் கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல் காதர், யாசின் ஆகிய 3 பேரையும் முதலில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது மாடல் அழகி நேகா மெகர் என்பது தெரியவந்தது. மும்பையில் தலைமறைவாக இருந்த மாடல் அழகி நேகாவை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வசதி படைத்தவர்கள், தொழில்அதிபர்களை அடையாளம் கண்டுள்ளார். டெலிகிராம் செயலி மூலமாக அவர்களை தொடர்பு கொள்வது போல தூண்டில் வீசும் நேகா மயக்கும் விதமாக பேசி தன்னை நேரில் சந்திக்க ஜே.பி.நகர் 5-வது ஸ்டேஜில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வரவழைப்பார். சம்பந்தப்பட்ட நபர் அங்கு சென்றதும் பிகினி உடையில் வரவேற்று உள்ளே அழைத்து செல்வாராம், வீட்டுக்குள் விருந்தினருடன் தனிமையில் இருப்பதை மற்ற 3 ஆசாமிகளும் மறைந்திருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறிப்பதை நேகா தலைமையிலான கும்பல் முழு நேர தொழிலாக செய்து வந்துள்ளது. மிரட்டலுக்கு பணியாத சிலர் தங்கள் புகைப்படங்களை கிராபிக்ஸ் படம் என்று கூறி பணம் கொடுக்க மறுத்தால், பிகினி உடையில் நேகா வீட்டிற்குள் அழைத்துச்செல்லும் காட்சிகளின் ரகசிய கேமரா காட்சிகளை அனுப்பி மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.