ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் பீட்ஸா, பர்கர், நிறமூட்டப்பட்ட குளிர் பானங்களை உட்கொள்வதால் எலும்புகள் மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக 206 எலும்புகளால் ஆனது மனித உடல் என்பார்கள். ஒவ்வொன்றும் உடல் இயக்கத்துக்கு வெகு முக்கியமானது. வயதாக ஆக எலும்புகளிலும் மூட்டு ஜவ்வுகளிலும் தேய்மானம் ஏற்படக் கூடும். ஆனால் துரித உணவுகளும் ஜங்க் ஃபுட்ஸும் உட்கொள்வதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குக் கூட எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.
வயது ஏற ஏற உடற்பயிற்சியை வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 40 வயது வரை ஜாகிங் போகலாம். 50 வயது வரை வேகமாக நடக்கலாம். அதற்கு மேல் உள்ளவர்கள் மெதுவாக நடந்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வதும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சிறந்த வழி என்று குறிப்பிடும் மருத்துவர்கள், அதிக கால்சியம் சத்துள்ள வெந்தயம், நிலக்கடலை, கீரை, பிரண்டை, ஆட்டு கால் சூப் போன்றவற்றை அவ்வப்போது உட்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு ஓய்வெடுத்தவர்களுக்கு எலும்புகளில் உள்ள ஆஸ்ட்ரிநோ பிளாஸ்ட் செல்களின் செயல்பாடு குறைந்திருக்கக் கூடும் என்றும், அத்தகையவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் டாக்டர்களின் கருத்து.
எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு மருத்துவர்களை அணுகாமல், நாட்டு வைத்தியம், கை வைத்தியம் எல்லாம் செய்து கொள்ள கூடாது என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை.