திருமணத்துக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்த 36 வயது மகன் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த துக்கத்தையும் மீறி அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய தாயாருக்கு மருத்துவர்களும் உறவினர்களும் நன்றியை ஆறுதலாகக் கூறி தேற்றி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லை விளாகத்தை சேர்ந்தவர் மணிகண்டன். தாயார் வெற்றிச் செல்வியுடன் குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
மறுமணத்துக்கு பெண் பார்ப்பதற்காக அண்மையில் இவர் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்திருந்தார். கடந்த வெள்ளியன்று மணிகண்டன் ஓட்டலில் மதிய உணவு வாங்கிக் கொண்டு வீரபத்திரன் என்ற நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த போது விபத்தில் சிக்கினார்.
கிழந்தாங்கி பாலம் என்ற இடத்தில் சாலையில் இருந்து மணலில் சறுக்கி இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த மணிகண்டனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மணிகண்டன் உடல் நிலை மோசமானதை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் வரப்பட்டார்.
இங்கு மணிகண்டன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக சனிக்கிழமையன்று குவைத்தில் உள்ள அவரது தாயார் வெற்றி செல்விக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக குவைத்தில் இருந்து புறப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார் வெற்றிச்செல்வி.
தலையில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தாலும் மணிகண்டனின் பிற உடலுறுப்புகளை தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் விளக்கிக் கூறினர். இதைக் கேட்ட வெற்றிச்செல்வி, மகன் மணிகண்டனின் உடலுறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.
வெற்றிச்செல்வியின் ஒப்புதல் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன வெங்கடேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து வந்த மருத்துவக் குழுவினரும்,திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவும் இணைந்து சுமார் 2 மணி நேரம் மணிகண்டனின் உடல் உறுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இதன் பின் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மணிகண்டனின் இதயம் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்டது.
மணிகண்டனின் இதயம் மற்றும் நுரையீரல் திருவாரூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வரை ஆம்புன்ஸ் மூலமும் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
இதே போன்று மணிகண்டனின் கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும், இரு சிறுநீரகங்கள் மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டன அவை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
மணிகண்டனின் கண்கள் இரண்டும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வேறு இரண்டு பேர் உலகை பார்க்கும் வகையில் தானமாக வழங்கப்பட்டது.
36 வயதில் மகன் அகால மரணமடைந்த துக்கம் தாளாமல் கண்ணீர் வடித்து வரும் போதிலும் உயிருக்குப் போராடும் யாரோ முன்பின் தெரியாதவர்களுக்கு உறுப்பு தானம் கொடுக்க சம்மதித்த மணிகண்டனின் தாயார் வெற்றிச்செல்வியை மருத்துவர்களும் உறவினர்களும் நன்றியை ஆறுதலாகக் கூறி தேற்றினர்.