செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு தோள்பட்டை முறிந்து பிறந்ததாக கூறி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ , செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செவ்வாய் கிழமை பிரசவ வலி ஏற்ப்பட்ட நிலையில் கடைசிவரை மருத்துவர்கள் யாரும் வரவில்லை எனவும் இரண்டு பயிற்சி மருத்துவர்கள் தான் ஜெயஸ்ரீக்கு மருத்துவம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
தனது வயிற்றை இரண்டு பயிற்சி மருத்துவர்களும் அமுக்கி அமுக்கி பிரசவம் பார்த்ததாகவும் தன்னால் வலி தாங்கமுடியவில்லை சுக பிரசவம் பார்க்க வேண்டாம்... ஆபரேஷன் மூலம் குழந்தையை வெளியே எடுங்கள் எனக்கூறியும் கேட்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ள ஜெயஸ்ரீ, பயிற்சி மருத்துவர்கள் தன்னை வைத்து பயிற்சி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் தனது குழந்தைக்கு தோள்பட்டை உடைந்ததாக கூறப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை பிறந்த குழந்தையை இதுவரை குழந்தையைக் கண்ணில் காட்டாமல் வைத்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்
இதற்கிடையே பெண்ணின் உறவினர்கள் மருத்துவர்களை கண்டித்து மருத்துவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழந்தைக்கு என்ன ஆச்சு ? குழந்தையை காண்பிக்க வேண்டும் எனக்கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர், ஜெயஸ்ரீக்கு பிறந்தது பெண் குழந்தை என்றும் வயிற்றிலேயே குழந்தையின் கை தோள்பட்டை உடைந்து விட்டதால் அதற்காக சிகிச்சை அளிப்பதால் குழந்தையை தாயிடம் கொடுக்கவில்லை என்று பொறுப்பு மருத்துவர் பாஸ்கர் தெரிவித்த நிலையில் அலட்சிய மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை வலியுறுத்தி உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்
இது தொடர்பாக பொறுப்பு மருத்துவர் பாஸ்கரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்ட போது அவர் விளக்கம் அளிக்க மறுத்து அங்கிருந்து சென்றார். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.