தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலர் 17 பேருக்கு பேரூராட்சி தலைவர் தனது சொந்த செலவில் டி.வி.எஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரை பரிசாக வழங்கி உள்ளார். ஸ்கூட்டர் கொடுத்து அதிமுக கவுன்சிலர்களையும் மகிழ்வித்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவராக திமுகவின் கலாவதி கல்யாண சுந்தரம் உள்ளார். தேர்தலின் போது 18 வார்டுகள் கொண்ட இந்த பேரூராட்சியில் திமுக 8 இடங்களையும் , அதிமுக 6 இடங்களையும், சுயேட்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றினர்.
திமுக பெரும்பாண்மைக்கும் குறைவான இடங்களே பெற்றிருந்த நிலையில், 4 சுயேட்சை கவுன்சிலர்களும் திமுகவின் தங்களை இணைத்துக்கொண்டதால் திமுகவின் கலாவதி கல்யாண சுந்தரம் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றார். இதையடுத்து மக்கள் பணி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆறுமுக நேரி நகராட்சி கவுன்சிலர்களுக்கு தனது சொந்த செலவில் இலவசமாக டி.விஎஸ். ஜூபிட்டர் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி வசதி படைத்த ஒரே ஒரு அதிமுக கவுன்சிலர் தவிர்த்து மற்ற அதிமுக கவுன்சிலர்களையும் சேர்ந்து மொத்தம் 17 கவுன்சிலர்களுக்கு அவர்களது பெயரிலேயே வார்டு நம்பருடன் கூடிய ஜூபிட்டர் ஸ்கூட்டர் வாங்கப்பட்டது. அதனை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கவுன்சிலர்களுக்கு பரிசாக வழங்கினார்
கவுன்சிலர்கள் அந்த வாகனத்தை பயன்படுத்த வசதியாக மாதம் 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சரின் கோரிக்கையை ஏற்று மாதம் 10 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்குவதாக பேரூராட்சி தலைவர் அறிவித்தார்
அனைத்து கவுன்சிலர்களுக்கும் கட்சி பேதமின்றி இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த வாகனங்கள் அனைத்தும் குறைந்தபட்ச முன்தொகை செலுத்தி மாத தவணைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.