இன்று உலக கல்லீரல் அழற்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹெபாடைடஸ் என்ற வைரஸ் ஆண்டுக்கணக்கில் நம் உடலில் குடியிருந்து ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், அதிலிருந்து விடுபடுவது குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஹெபாடைடஸ் பி வைரசைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் பரூச் ப்ளும்பெர்க் பிறந்தநாளை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ம் நாள் உலக கல்லீரல் அழற்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுத்தம் செய்யப்படாத தண்ணீர், ஃபாஸ்ட்புட் எனப்படும் உணவுப் பொருட்கள், மது மற்றும் மரபணு காரணமாக ஹெபாடைடஸ் வைரஸ் நமக்குள் உற்பத்தியாகிறது என்று கூறும் மருத்துவர்கள், அதிகக் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
காய்ச்சல், அதிக சோர்வு, வாந்தி மற்றும் வயிற்று வலி, தலைவலி மற்றும் குமட்டல் போன்றவை ஹெபாடைடஸ் பி நோயின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தேதியில் ஹெபாடைடஸ் பி வைரஸ்தான் உலகில் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட காரணமானது என எச்சரிக்கும் மருத்துவர்கள், நமது உடலில் இருக்கும் குறிப்பிட்ட வைரஸ் இருப்பதை சரியான நேரத்தில் கண்டுபிடித்தால் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.
உலகத்தில் தற்போது 2 கோடியே 90 லட்சம் மக்கள் ஹெபாடைடஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் இந்த நோயால் உயிரிழக்கின்றனர் என்கிறது ஆய்வறிக்கை. 2030ம் ஆண்டுக்குள் ஹெபாடைடஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உலக சுகாதார மையம் குறிக்கோளைக் கொண்டுள்ளது. எனவே மதுவையும், கொழுப்பு நிறைந்த உணவையும் தவிர்த்து வளமோடு வாழ்வோம்.