தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்க்கு திதி கொடுப்பதற்காக ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளாக தை அமாவாசை கருதப்படுகிறது.
ராமேஸ்வரம்:
இதையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடுவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமனோர் அதிகாலையிலேயே திரண்டிருந்தனர். கடற்கரையில் முன்னோர்களின் நினைவாக திதி கொடுத்து வழிபட்டனர். ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் மக்கள் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.
குற்றாலம்:
குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்தனர். அருவியில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திதி கொடுத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்:
தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர். பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் தை அமாவாசையொட்டி ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின் கடலில் புனித நீராடினர்.
பவானி கூடுதுறை:
தை அமாவாசையை முன்னிட்டு, தென்னகத்தின் காசி என்றழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். மேலும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பரிகார மண்டபங்கள் மற்றும் படித்துறையில் கடந்த வாரம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர்:
தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம் கொண்டு தர்ப்பணம் செய்ததோடு, கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி:
தை அமாவாசையையொட்டி தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையிலேயே குவிந்தனர். இதனை தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடியதுடன், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பாபநாசம்:
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பாபநாசம் தாமிரபரணி நதிக்கரை மற்றும் கோவில் படித்துறைகளில் தர்ப்பணம் செய்ய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால், அமாவாசையை முன்னிட்டு நெல்லை மாவட்டம், பாபநாசத்தில், காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பூம்புகார்:
தை அமாவாசையையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் புனித நீராடிய பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.
சதுரகிரி:
தை அமாவாசையையொட்டி, விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை கோயில் ஏராளமானோர் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், அமாவாசை பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த வகையில், தை அமாவாசையையொட்டி, இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி:
தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தாமிரபரணி ஆற்றங்கரைக்கு ஏராளமானோர் வருகை தந்து, நீராடி வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் உச்சரிக்க எள், தண்ணீர் , மலர்களால் பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆற்றங்கரையில் நீராட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.
மதுரை:
தை அமாவாசையை முன்னிட்டு இன்மையில் நன்மை தருவார் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகளவில் மக்கள் குவிந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள இந்த கோவிலுக்கு அதிகாலை முதலே திரண்ட மக்கள், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.