இந்து கடவுள் கிருஷ்ணரால் அருளப்பட்டதாகக் கூறப்படும் பகவத்கீதையில் மட்டுமே சாதிப் பிரிவினைகள் இருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசினார். உலகில் இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிப்பதாகவும், வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்துக்கள் இங்கிருந்து அங்கு இடம் பெயர்ந்தவர்கள் என்றும், இந்தியாவின் உள்ள பிற மதத்தவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் அல்ல என்றும் திருமாவளவன் கூறினார்.
இயேசு, புத்தர், அல்லா ஆகியோரை விட பகவான் கிருஷ்ணன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதராக பிறந்து வாழ்ந்தவர் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துவம், இஸ்லாம், பவுத்தம் ஆகிய மதங்கள் மனிதர் அனைவரையும் சமமாக பாவிப்பதாகவும் கிருஷ்ண பகவானின் போதனைகள் என கூறப்படும் பகவத்கீதையில் தான், மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கும் வகையில் 4 வித வர்ணங்கள் உள்ளதாகவும் திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
தான் இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து விமர்சிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.