சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து மழை நீரை வெளியேற்ற 1200 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வடிகாலை முழுமையாக தேடி சீரமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த பணியில் நகராட்சி ஊழியர்களோடு பொதுமக்களும் தன்னார்வத்துடன் இணைந்துள்ளனர்.
அண்மையில் பெய்த கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி உயரத்துக்கு தேங்கி நின்ற தண்ணீர் இறைத்து வெளியேற்றப்பட்டது.
நடராஜர் கோவிலில் மழைக்காலத்தில் சேரும் நீர், யானைக்கால் மண்டபத்தின் மேற்குப் பகுதியிலிருந்து நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தைச் சென்றடையும் வகையில் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டது. கடலூர் மாவட்ட புயல் நிவாரண சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, ஆக்கிரமிப்புகள், அடைப்புகளை நீக்கி கால்வாய்களை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி இதுவரை 8 கால்வாய்களை நகராட்சி ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
வடக்கு வீதியில் இருந்து தில்லை அம்மன் கோவில் எதிரே உள்ள குளம் வரை செல்லும் கால்வாயின் வழி முதலில் கண்டு பிடித்தனர். அதில் கிடந்த மண் மற்றும் குப்பைகளை அகற்றி வழி ஏற்படுத்தி, திருப்பார் கடலுக்குச் செல்லும் கிளை வாய்க்காலையும் சுத்தப்படுத்தினர்.
தொடர்ந்து காரைக்காட்டு சொக்கலிங்கம் தெருவில் இரண்டு முக்கிய நீர் தொட்டிகளை கண்டுபிடித்தனர். கால்வாய்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் பார்த்த மக்கள், தன்னார்வத்துடன் முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.