ரஷ்யாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழுக்குத் தொண்டாற்றிய அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
ரஷ்யாவின் தலைகரான மாஸ்கோவில் 1941 ம் ஆண்டில் பிறந்தார் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி. மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றிருந்தார் துப்யான்ஸ்கி.
சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்துபோன நிலையில், துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகத் துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ் கற்பித்து வந்தார். 10 பல்கலைக்கழகங்களின் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்தார். இதழியல், வெளியுறவு என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அவரிடம் ஆர்வமாகத் தமிழ் கற்று கொண்டனர்.
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து அவர் 2000-ல் வெளியிட்ட 'ரிச்சுவல் அண்டு மித்தாலஜிக்கல் சோர்ஸஸ் ஆஃப் தி ஏர்லி தமிழ் பொயட்ரி' என்ற புத்தகம் தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்றாகும். மேலும் பல ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையையும் அவர் நடத்திவந்தார்.
இவர் 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். இவ்வாறு தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், வரலாறு என்று ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்த தமிழறிஞர் துப்யான்ஸ்கி 79 வயதில் கொரோனா பாதிப்பால் மாஸ்கோவில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் அறிஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.