தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் மரம், பிரம்பு, மூங்கில் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களைக் கொண்டு உள் அலங்காரம் செய்யப்பட்டுள்ள வீடு, கட்டடக் கலையின் புதிய அடையாளமாகத் திகழ்கிறது.
தருமபுரி மாவட்டம் சோகத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆடிட்டராகப் பணிபுரிந்து வருகிறார். இயற்கை மீது ஈடுபாடு கொண்ட இவர் மரபுவழிக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்திப் புதிய வீட்டைக் கட்டியுள்ளார். நாலாயிரத்து ஐந்நூறு சதுர அடி பரப்பில் கட்டியுள்ள இந்த வீட்டில் செட்டிநாட்டுக் கட்டுமானப் பாணியில் தூண்கள், நிலைகள், கதவுகள், சன்னல்கள், மாடிப்படிகள் அனைத்தும் தேக்கு, மூங்கில், பனை ஆகிய மரங்கள், பலகைகளைக் கொண்டு செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூரில் இருந்து கருங்கற்கள், செங்கற்கள், கேரளத்தில் இருந்து ஓடுகள், ராஜஸ்தானில் இருந்து பளிங்குக் கற்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து இந்த வீடு கட்டப்பட்டு உள்ளது.
வெளிப்புறத்தில் இருந்து நச்சுயிரிகள் வீட்டுக்குள் வராமல் இருக்கப் பழங்காலக் கோட்டைகளைச் சுற்றி உள்ள அகழிபோல இந்த வீட்டிலும் சிறிய அகழி அமைக்கப்பட்டுள்ளது. தென்னை நார்களைக் கொண்டு பூந்தொட்டிகள் செய்து தொங்க விடப்பட்டுள்ளது. மழைநீரைச் சேமித்துப் பயன்படுத்தவும், கழிவு நீரைத் தூய்மைப்படுத்தவும் சாம்பல், மணல், கூழாங்கற்கள் கொண்டு கிணறு போன்ற தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கதவுகள், மாடிப் படிக்கட்டுகள், கட்டில், மேசைகள், நாற்காலிகள், அலங்கார விளக்குகள் அனைத்தும் மரப்பலகைகள், மூங்கில்கள் கொண்டு கலைநயமாக அமைக்கப்பட்டுள்ளன. வீட்டுக்கு வெளியே குடும்பத்துடன் அமர்ந்து பேச ஓலை, வைக்கோல், கரும்புத்தோகை ஆகியவற்றாலான கூரையைக் கொண்ட குடில் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர், உள்ளூர் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோரின் ஆலோசனைகளின்படி கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக இதன் உரிமையாளர் மணிகண்டன் தெரிவித்தார்.
3 தளங்களைக் கொண்ட இந்த மிகப்பெரிய வீட்டிற்கு குளிர்சாதன வசதி கிடையாது. இயற்கை முறைகளைப் புகுத்தி இந்த வீடு கட்டப்பட்டுள்ளதால் காற்றோட்டமும் குளிர்ச்சியும் உள்ளன. இந்த வீட்டின் வடிவமைப்பையும், கட்டுமானக் கலையையும் ஏராளமானோர் வியப்புடன் கண்டு செல்கின்றனர்.