தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழையும், 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் முதல் வட தமிழகக் கடற்கரை வரை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. நேற்றுக் காலை எட்டரை மணி முதல் மாலை ஐந்தரை மணி வரையிலான 9 மணி நேரத்தில் அதிக அளவாகத் தூத்துக்குடியில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.