பசி இன்றி, பிணி இன்றி ஆரோக்கியமாக வாழ, உணவே மருந்து என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக உணவு தினத்தையொட்டி, கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் குறித்து அலசுகிறது, இந்த செய்தித் தொகுப்பு.
உலகில் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக 1981- ல் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி, உலக உணவு தினமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உணவு தினத்தையொட்டி, சத்தான உணவே ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம் என ஊட்டச்சத்து நிபுணர்கள்,அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்கள்.
அதிக சத்துகள் கொண்ட பாரம்பரிய உணவுகளை நாம் மறந்து, துரித உணவு களையும், நொறுக்கு தீனிகளையும் சாப்பிடுவதால், தேவை இல்லாத உடல் உபாதைகள் உருவாவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்ய வேண்டுமென்றால், சத்தான உணவு சாப்பிட்டால் மட்டுமே சக்தி கிடைக்கும். காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள், கீரைகள் உள்ளிட்டவை சத்து உணவுகள் என பட்டியலிட்டுள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள், வயதுக்கு ஏற்ற உயரம், உடல் எடை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துமாறு யோசனை தெரிவிக்கிறார்கள்.
வாகனங்களுக்கு எரிபொருள் எப்படி முக்கியமோ - அது போல உடலுக்கு உணவு மிகவும் அவசியம். பாதுகாப்பற்ற உணவுகளை சாப்பிட்டால், 200 வகையான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.