இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா குறித்த விவரங்களை இந்திய உளவு அமைப்பான ரா பிரிவு அதிகாரிகள் பெற்றுள்ள நிலையில், கோவை, மதுரை வீடுகளில் சிபிசிஐடி போலிசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் 7 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். விஷம் வைத்து அவன் கொல்லப்பட்டானா என்பதை அறிய அவனது உடற்கூறு ஆய்வின் போது எடுக்கப்பட்ட உறுப்பு மாதிரிகள் சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அங்கொட லாக்காவின் காதலி எனக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த அமானி தான்ஜி, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கி உதவியதாக மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். சிவகாமிசுந்தரியின் 7 வங்கி கணக்குகளுக்கு 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கோவை காளப்பட்டியில் அங்கொட லொக்கா, காதலி அமானி தான்ஜிடன் வசித்து வந்ததாக கூறப்படும் வீட்டில், டிஎஸ்பி ராஜு தலைமையில் 10 சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான "ரா" அமைப்பை சேர்ந்த 5 அதிகாரிகள் கோவையில் ஐஜி சங்கர் உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு அங்கொட லொக்கா தொடர்பான விவரங்களை பெற்றுள்ளனர்.
மதுரையில் ரயிலார்நகர் பகுதியில் அங்கொட லக்காவுக்கு உதவிய சிவகாமி சுந்தரி தங்கியிருந்த 4 வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அண்டை வீட்டார்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி பரமசிவம் தலைமையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிவகாமி சுந்தரி கடைசியாக தங்கியிருந்த சாந்திநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் அங்கு அவரது வீட்டை சோதனையிட்டு 6 போலி பாஸ்போர்ட்கள், போலி ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் அவரது வழக்கறிஞர் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. சிவகாமி சுந்தரியுடனான மொபைல் தொடர்பு, இணையதள தொடர்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரையில் தங்கியிருந்த காலங்களில் போதை பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் சிபிசிஐடி போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.