கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை அருகிலுள்ள நடுமலை ஆறு, வாழைத்தோட்ட ஆறு, கூலங்கல் ஆறு போன்ற ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் பிர்லா பால்ஸ், வெள்ளமலை டனல், இறைச்சிப்பாறை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதோடு, ஆங்காங்கே புதிதாக சிறு சிறு நீர்வீழ்ச்சிகளும் உருவாகியுள்ளன.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. விநாடிக்கு 1,700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், சித்திரைச்சாவடி, சென்னனூர் தடுப்பணைகள் நிரம்பியதோடு, பேரூர் படித்துறையின் வழியே தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வேடபட்டி செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக நுரை கிளம்புவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.