கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜூலை 5 ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில், யுஏஇ துணை தூதரக லக்கேஜ் என்ற பெயரில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை கடந்த 10 ஆம் தேதி முதல் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதில் விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களான சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரீத், ரமீஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்குகள், எட்டு மொபைல் போன்கள், ஆறு சிம் கார்டுகள் மற்றும் பல வங்கி கணக்கு விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்று கைது செய்யப்பட்ட 6 பேரையும் சேர்த்து இது வரை இந்த வழக்கில் 10 பேர் கைதாகி உள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரமீசுடன் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டதாக கடந்த 30 ஆம் தேதி, எர்ணாகுளத்தை சேர்ந்த ஜலால், மலப்புரத்தை சேர்ந்த செய்யது அலவி ஆகியோர் கைதானதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
31 ஆம் தேதி மலப்புரத்தை சேர்ந்த முகம்மது ஷாபி, பி.டி.அபு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எர்ணாகுளத்தை சேர்ந்த முகம்மது அலி இப்ராஹிம், முகம்மது அலி ஆகியோர் கைதாகினர்.
இவர்கள் அனைவருக்கும் தங்க கடத்தலில் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினரான முகம்மது அலி , 2010 ல் பள்ளி ஆசிரியர் ஒருவரின் கையை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, 2015 ல் குற்றமற்றவர் என விடுதலையானார்.