கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் பிரத்யேக சிகிச்சை மையத்தில் கடுமையான மூச்சுதிணறலால் அவதிப்பட்டவர்கள் உள்பட 513 பேர் நலம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பில்லா சித்தமருத்துவ சிகிச்சை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது .
பல லட்சங்களை கொட்டிக் கொடுத்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் கூட உயிரிழந்துவரும் நிலையில் பிரத்யேகமாக சித்தமருத்துவத்தால் மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் கல்லூரி சிகிச்சை மையத்தில் இதுவரை ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் 513 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 730 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது 216 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்றும் கடுமையான மூச்சுதினறலோடு இங்கு வந்த கொரோனா நோயாளிகளும் முழுகுணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்கிறார் சாதித்து காட்டிய சித்த மருத்துவர் வீரபாபு.
காலையில் சூரிய குளியல், மாலையில் நடைபயிற்சி என ஒவ்வொரு நோயாளியின் தன்மைக்கு ஏற்ப சித்த மருந்துகளை கொண்டு சிகிச்சை முறைகள் கையாளப்படுவதால் வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கபெற்று நோயாளிகள் சுகம் பெறுவதாகவும் வீரபாபு தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களை பறிகொடுத்த 20க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்று நலம் அடைந்து சென்றுள்ளனர். இதில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் அடங்குவர்.
இதுவரை ஒரு உயிரிழப்புக்கூட இல்லாமல் சிறப்பான முறையில் சித்தமருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கூடுதலாக 250 படுக்கை வசதிகளுடன் வியாசர்பாடி அம்பேத்கர் கலை அரிவியல் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு 10 நோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். 240 படுக்கை வசதிகள் காலியாக உள்ளது.
இந்த நிலையில் கட்டணமில்லா சித்தமருத்துவ சிகிச்சையில் சேர்ந்து உடல் நலம் பெறலாம் என்று சித்த மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தமருத்துவம் மகத்தானது என்பதை நமது சித்தமருத்துவர்கள் தங்களது திறமையின் மூலம் நிரூபித்து வருகின்றனர். அதே நேரத்தில் யுனானி மூலம் கொரோனா சிகிச்சை அளிப்பதாக கூறி ஒரு நோயாளியின் மரணத்துக்கு காரணாமானதாக வேலூர் அருகே யுனானி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.