ஊரடங்கு உத்தரவை மீறி ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்திய கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இப் பள்ளியில் சுமார் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இப்பள்ளியில் நுழைவு தேர்வு நடந்தது தொடர்பான காணொளியும், வினாத்தாள்களும் வெளியாகியது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கான விபரங்களை கேட்டறியவே மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் தேர்வு அட்டை, பேனா, பென்சிலுடன் இருந்து வெளியேறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஊரடங்கு சமயத்தில் மாணவர்களை வரவழைத்து தேர்வு நடத்தி அலட்சியமாக செயல்பட்டதாக சிஎஸ்ஐ பள்ளி நிர்வாகம் மீது புகார் எழுந்த நிலையில், பள்ளியில் ஆய்வு நடத்திய முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
தேர்வு நடைபெற்றதாக வெளியான காணொளிகள், வினாத்தாள்களை அடிப்படையாககொண்டு முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட ஆட்சியரின் பரிசீலனைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு அஞ்சி பொதுத்தேர்வே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 6-ஆம் வகுப்புக்கு ரகசியமாக நுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.