எஸ்ஐ வில்சன் கொலை வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில், அதிரடி சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரியில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான தீவிரவாதிகள் தவுபிக், அப்துல் சமீம் ஆகியோர், பல்வேறு ஊர்களில் சிலரிடம் பேசி உள்ளதோடு, அவர்களுக்கு சிம் கார்டு சப்ளை செய்தவர்கள் குறித்தும் விசாரணையை என்ஐஏ தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை கொச்சியில் இருந்து சேலம் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சேலம் அம்மாபேட்டை மற்றும் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சேலம் டவுன், முகமது புறா சந்து பகுதியில் வசிக்கும் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டிலும், அதன் அருகே உள்ள செல்போன் கடையிலும் சோதனை நடைபெற்றது.
சிம் கார்டு சப்ளை புகாரில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் கோயம்பேடு சேமாத்தாம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோன்று, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின், பிள்ளையார் பாளையம் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்ட காஜா மொய்தீன் என்பவரின், கொள்ளுமேடு பகுதியில் உள்ள 3ஆவது மனைவி வீடு, நெய்வேலியில் உள்ள மற்றொரு மனைவி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
மேல்பட்டாம்பாக்கத்தில் கார் ஓட்டுநர் ஜாபர் அலி என்பவரது வீடு, பரங்கிப்பேட்டை மதினா தெருவில் உள்ள அப்துல் சமது என்பவரது வீட்டிலும், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில், செய்யது அலி நவாஸ் என்பவரின் 2ஆவது மனைவி மெய்தீன் பாத்திமா வீட்டில், 4 மணி நேரத்திற்கும் மேலாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனிடையே, எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தக்கலை காவல் நிலைய வளாகத்தில் என்.ஐ.ஏ அலுவலகம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.