ஆன்லைன் மோசடிகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதே சமயம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.
பாதுகாப்பான வங்கிப் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட “வாய்க்குப் போடுங்க பூட்டு” என்ற குறும்படத் தகட்டை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வெளியிட்டார். தனியார் வங்கியும் மாநகர காவல்துறையும் இணைந்து தயாரித்துள்ள இந்தக் குறும்படத்தில், போலீசாரே நடித்துள்ளனர். ஏடிஎம் அட்டை விவரங்கள் குறித்து கேட்டு வரும் செல்போன் அழைப்புகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அந்த குறும்படம் பேசுகிறது.
குறும்படத் தகட்டை வெளியிட்டுப் பேசிய மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், ஆன்லைன் மோசடி மற்றும் ஏடிஎம் அட்டை மோசடியில் ஈடுபடுபவர்கள், பொதுமக்களின் பயம், ஆசை என்ற இரண்டு அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார்.
சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதன் மூலம் பல்வேறு குற்றங்களைக் கண்டறிய முடிந்தாலும் ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருப்பதாகக் கூறிய காவல் ஆணையர், அதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
படிக்காத பாமர மக்கள் மட்டுமின்றி, படித்தவர்களும் ஆன்லைன் மோசடியில் ஏமாறுவது கவலையளிப்பதாகக் கூறிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வங்கித் தரப்பில் இருந்து எக்காரணம் கொண்டும் வங்கிக் கணக்கு, ஏ.டி,எம். அட்டை தொடர்பான ரகசிய தகவல்கள் கேட்கப்பட மாட்டாது என்றார்.