கேரளாவில் இரண்டாவதாக ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து நாடு திரும்பிய கேராளாவை சேர்ந்த பெண்ணுக்கு, நாட்டிலேயே முதலாவதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 30ம் தேதி உறுதிசெய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அடுத்த 3 நாட்களிலேயே கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து திரும்பிய அவர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அங்கு ஆயிரத்து 600 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
முதலாவதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெண், டிசம்பர் 23ம் தேதி கொச்சி வரும் முன்பு விமானத்திற்காக சுமார் 4 மணி நேரம் காத்திருந்த கொல்கத்தா விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பலனளித்து வருவதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2ஆவது நபர் கடந்த 24ம் தேதி சீனாவிலிருந்து திரும்பி வந்தது முதல் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புனேவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திலிருந்து அந்த நபரின் மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெறவில்லை எனக் கூறிய அமைச்சர், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட வாய்ப்பிருக்கலாம் என்றும், ஆனால் அறிக்கை கிடைத்த பின்னரே அதை தங்களால் உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.