பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி, அதிமுக கூட்டணி 8 இடங்களையும், திமுக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறை உள்ளிட்ட காரணங்களுக்காக 26 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி உள்ளிட்ட 335 பதவிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கஸ்தூரி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை ஏற்காத திமுகவினர் தேர்தல் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை போலீஸார் வெளியேற்றியபோது, இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை கண்டித்து கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் திமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.