நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
ஹாமில்டனில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. இதில் அதிகப்பட்சமாக ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர்.
இதையடுத்து 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் ரன்குவிக்க திணறியது. இருப்பினும் கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 95 ரன்களை அதிரடியாக குவிக்க சரிவிலிருந்து மீண்டது. முடிவில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை நியூசிலாந்து எடுக்க டையில் முடிந்தது.
இதையடுத்து வெற்றி, தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 17 ரன்களை எடுத்தது. இதையடுத்து 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் இந்தியா விளையாடியது. ரோஹித்தும், கேஎல் ராகுலும் டிம் சவுத்தியின் ஓவரின் முதல்பாதியில் திணறியபோதும், கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 சிக்சர்களை பறக்கவிட்டு அணிக்கு ரோஹித் சர்மா வெற்றி தேடி தந்தார்.
இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகளை கொண்ட தொடரில் 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. இதன்மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக இருபது ஓவர் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.