3ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஹாமில்டனில் (Hamilton) நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ரோஹித்தின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சிறப்பாக ஆடிய அவர் 23 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 65 ரன்னிலும், கேஎல் ராகுல் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிறகு வந்த வீரர்களில் கேப்டன் கோலி மட்டும் அதிகப்பட்சமாக 38 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். துபே 3 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 17 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை இந்திய அணி சேர்த்தது. பாண்டேயும், ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.