நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட காளைகள், 450-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்புடன், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 8. 45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் போட்டியில் களமிறக்கப்பட்டன.வாடிவாசலில் ஒவ்வொன்றாக திறந்துவிடப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பல குழுக்களாக பிரிந்து அடக்கி பரிசுகளை வென்றனர்.
அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான ஒரு காளையும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 6 காளைகளும் இதில் பங்கேற்றன. அந்த காளைகளை எந்த ஒரு மாடுபிடி வீரராலும் பிடிக்கமுடியவில்லை. வாடிவாசலில் திறந்து விடப்பட்ட ஒரு காளை, கேலரி பக்கமாக ஓடி அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் மீது பாய்ந்தது. இதில் அவரது வலது தொடையில் கொம்பு முட்டி காயம் ஏற்பட்டது. உடனே அவர் தரையில் படுத்து தப்பினர். இதேபோல் மாடுபிடி வீரர்கள் திலீப் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக மருத்துவ குழுவினர், மாடுபிடி வீரர்களையும், காளைகளையும் பரிசோதித்து போட்டிக்கு அனுமதித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.