சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீரடியில் இன்று முழு அடைப்பு ((bandh)) போராட்டம் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்திலுள்ள சீரடியில் சாய்பாபாவுக்கு பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டு, நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பர்பானி மாவட்டம் பத்ரியிலுள்ள சாய் ஜன்மஸ்தான் எனுமிடம்தான் சாய்பாபா பிறந்த இடம் என்றும், ஆதலால் பத்ரி நகர மேம்பாட்டுக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார்.
சாய்பாபா பிறந்த இடமாக சீரடியை அவரது பக்தர்கள் கருதி வரும் நிலையில், உத்தவ் தாக்கரேயின் கருத்தால் சர்ச்சை உருவாகியுள்ளது. இதையடுத்து உத்தவ் தாக்கரேயின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீரடியில் இன்று உள்ளூர்மக்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இருப்பினும், சீரடியிலுள்ள சாய்பாபா கோயில் வழக்கம் போல இன்று அதிகாலை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீரடிக்கு சென்ற சாய்பாபா பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.