ஹிஸ்புல் தீவிரவாதிகளை தப்ப வைக்கும் முயற்சியில் போலீசாரின் பிடியில் சிக்கிய ஜம்மு காஷ்மீர் டி.எஸ்.பி. தேவேந்தர் சிங் மீதான விசாரணையை என்.ஐ.ஏ.எனப்படும் தேசிய புலனாய்வு முகமை துவக்கி உள்ளது. இதில் தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்த உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 11 ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளான நவீத் பாபு, இர்பான் மற்றும் வழக்கறிஞர் ராபி அகமது ஆகியோரை, தப்ப விடும் நோக்கில் 12 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, டி.எஸ்.பி. தேவேந்தர் சிங் காரில் கொண்டு சென்றார் என்பது குற்றச்சாட்டு.
குல்காம் நெடுஞ்சாலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தேவேந்தர் சிங்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் AK 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
அவரிடம் மத்திய மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி, சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை பணியிடை நீக்கம் செய்த ஜம்மு காஷ்மீர் அரசு, 2018 ல் அவருக்கு வழங்கப்பட்ட வீரதீர செயலுக்கான பதக்கத்தையும் பறிமுதல் செய்தது.
தப்ப முயன்ற தீவிரவாதிகள், டெல்லியில் குடியரசு தன கொண்டாட்டங்களின் போது பயங்கரவாதச் செயல்களை நடத்த திட்டமிட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ.க்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 16 ஆம் தேதி உத்தரவிட்டது.
இதை அடுத்து, விசாரணை துவக்கப்பட்டு, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தேவேந்தர் சிங் டெல்லிக்கு கொண்டு வரப்படுவதாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விசாரணையில் அவருக்கு இருக்கும் தீவிரவாத தொடர்புகள் குறித்த பல உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.