முரசொலி மற்றும் துக்ளக் பத்திரிகைகள் குறித்து, எவரும் எழுதிக் கொடுக்காமல் சொந்தமாக பேசியதால் ரஜினி தவறுதலாக பேசியிருக்கக் கூடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு பத்திரிகைகள் குறித்து தனித்தனியாக கருத்துக்களை கூறியிருக்கலாமே தவிர ஒப்பிட்டுக் கூறியது தவறு என்றார்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனைகளும் இல்லை கருத்து வேறுபாடுகளும் இல்லை. கூட்டணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். நாங்கள் எங்கள் நிலையை சொன்னோம் அவ்வளவுதான். குடும்பம் என்று இருந்தால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்றார்.
விவாதம் செய்யாமல் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது. நல்ல நட்புகிடையில் சிறப்பான விவாதங்கள் வந்து போக வேண்டும். அந்த வகையில் நாங்கள் சிறந்த நண்பர்களே. விவாதம் என்பது வேறு கருத்து வேறுபாடு என்பது வேறு என குறிப்பிட்டார்.