டெல்லி நிர்பயா பாலியல் கொலை வழக்கில் மரண தண்டனை கைதிகள் வினய் குமார் சர்மா,முகேஷ் ஆகியோர் மரண தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில், துணை மருத்துவ படிப்பு மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில், 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஒரு குற்றவாளி திகார் சிறையில் இறந்து போன நிலையில், சிறார் குற்றவாளி தவிர்த்த இதர 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு எதிராக அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை கடந்த 18 ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்த து.
இவர்களை வரும் 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் ஏற்றுவதற்கான கறுப்பு வாரண்டு என கூறப்படும் மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அதற்கான ஒத்திகைகள் திகார் சிறையில் நடக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் அளித்த அவகாசத்தின் அடிப்படையில், இறுதி கட்ட சட்ட நிவாரணமாக இந்த இருவரும் உச்சநீதிமன்றத்தில் குறைதீர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன், அசோக் பூஷண், ஆர்.பானுமதி அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது.
சட்டரீதியான கடைசி வாய்ப்பும் முடிவுற்ற நிலையில் இனி கருணை அடிப்படையில், அவர்களின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.