தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மறைமுகத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு, மாநில தேர்தல் ஆணையரிடம் தி.மு.கவினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கை மனுவை டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கிரிராஜன் உள்ளிட்ட திமுகவினர் தேர்தல் ஆணையரிடம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, திமுகவின் புகார் மனு மீது தனிக்கவனம் செலுத்தி, தேர்தலை விரைவாக நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வாக்களிக்க தகுதியானவர்களில் 51 சதவிகிதம் பேர் வந்திருந்தாலே, தேர்தலை நடத்தலாம் எனும் விதி உள்ள நிலையில் பல இடங்களில் காரணமே இல்லாமல் தேர்தல் நிறுத்தப்பட்டதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.