ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 80 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கின் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காஸிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளது.
ஈராக்கிலுள்ள அயின் அல் அஸாத் விமான தளம் மற்றும் அபிரில் எனும் பகுதியில் உள்ள ராணுவ தளம் ஆகியவற்றில் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களை குறிவைத்து அந்த இரண்டு தளங்கள் மீதும் இன்று அதிகாலை சுமார் 15 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி ஈரானின் புரட்சிகர படையினர் தாக்குதல் நடத்தினர்.
15 ஏவுகணைகளும் ஈரான் குறி வைத்த இலக்கான ஈராக்கிலுள்ள அயின் அல் அஸாத் விமான தளம் மற்றும் அபிரில் எனும் பகுதியை சரியாக தாக்கியதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வீடியோவையும் ஈரான் நாட்டு தொடர்புடைய பிரஸ் டிவி வெளியிட்டது.
ஈரானின் ஏவுகணை தாக்குதல் பரபரப்பு தணிவதற்குள், ஈராக் தலைநகர் பாக்தாத் வான்பரப்பில் ஏராளமான போர் விமானங்கள் திடீரென பறந்து சென்றன. ஆனால் அந்த விமானங்கள், ஈரானுக்கு சொந்தமானவையா என்பது குறித்து தகவல் இல்லை.
இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 80 வீரர்கள் பலியாகியிருக்கலாம் என ஈரானின் பிரஸ் டிவி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை வேறு சர்வதேச ஊடகங்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் (Mike Pompeo and Defense Secretary Mark Esper) ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு உடனடியாக விரைந்தனர்.
நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிறகு அதிபர் டிரம்ப் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதே சமயம், அமெரிக்கா உலகிலேயே வலிமையான ராணுவத்தை கொண்டுள்ளதாகவும் உலகின் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத ஆயுதங்கள் தங்களிடம் உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரானிடம் இருந்து வரும் எத்தகைய சவாலையும் சந்திக்கும் வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் (Mark Esper) தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் தீவிர நிலைப்பாட்டை கவனத்தில் கொண்டு, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் அமெரிக்க நலன்களை காக்க படை பலத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளபதிகளை தொடர்பு கொண்டு, அப்பிராந்திய நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், எத்தகைய சவாலுக்கும் தயாராக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டிருப்பதாக மார்க் எஸ்பர் குறிப்பிட்டார்.
ஈரானுடன் அமெரிக்கா போரை விரும்பவில்லை என்றும், அதேநேரத்தில் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையானது ஈரானின் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Watch More ON : https://bit.ly/35lSHIO
Also Read : ஈரானில் விமானம் விபத்து... 170 பயணிகள் உயிரிழப்பு ..!