சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, செப்டம்பர் மாதத்தில் 30 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பானது எனக் கருதி தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்ததே அந்த சமயத்தில் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது.
பின்னர் படிப்படியாக குறைந்த தங்கம் விலை ஆண்டின் இறுதியில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்றே தங்கம் விலை உயர்ந்தது. கடந்த 3ம் தேதி மீண்டும் 30 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையான தங்கம் விலை, அதற்கு மறுநாளும் உயர்ந்தது. நேற்று விடுமுறை என்பதால் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம்விலை சவரனுக்கு 512 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் வரலாறு காணாத வகையில் 31 ஆயிரத்து 168 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டி விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 64 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 896 ரூபாயை எட்டி விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் வரை அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 30 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 52 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்திருப்பதன் தாக்கமே இந்தியாவிலும் தங்கம் விலை உயர்வதற்கு காரணமாக கூறப்படுகிறது.