போலி ஆப் வைத்துக் கொண்டு பணம் செலுத்தியதுபோல் காண்பித்து கால்டாக்ஸி ஓட்டுநர்களை கடந்த 2 ஆண்டுகளாக ஏமாற்றி மோசடி செய்து வந்த இளைஞரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தங்களது நிறுவனத்தை சேர்ந்த ஓட்டுநர்களை இளைஞர் ஒருவர் பணம் தராமல் மோசடி செய்ததாக நம்ம யாத்திரி என்ற கால் டாக்ஸி நிறுவனம் அளித்த புகாரில், கால் டாக்ஸி புக் செய்யப்பட்ட செல்போன் எண்ணை வைத்து புழுதிவாக்கம் பகுதியில் தங்கியிருந்த ரியாஸ் ரபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டுநரின் ஜிபே எண்ணிற்கு போலி ஆப் மூலமாக அனுப்பினால் பணம் சென்றது போல டிக் மட்டுமே காண்பிக்குமே தவிர வங்கி கணக்கிற்கு பணம் செல்லாது.
கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மட்டுமல்லாது கடைகளில் பொருட்களை வாங்கியும் மோசடி செய்துள்ள ரியாஸ் ரபீக், சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஆயிரம் ரூபாய்க்கு குறைவான பணம் மட்டுமே அந்தப் போலி ஆப் மூலமாக அனுப்புவார் எனவும், அதுவும் கூட்ட நெரிசல் போன்ற இடங்களில் மட்டுமே இது போன்ற மோசடி ஆப்பை பயன்படுத்தியுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.