சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் அம்மோனியா, கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் திரவ வடிவில் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
அமோனியா கொண்டு வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வாயுக் கசிவு ஏற்பட்டது.
இதனால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்ட 60 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் உர ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாயுக் கசிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஐ.ஐ.டி. நிபுணர் குழு மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
20 நிமிடங்களில் வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவும், பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியன் ரிஜிஸ்டர் ஆஃப் ஷிப்பிங் மற்றும் தமிழ்நாடு மரைன் போர்டு அனுமதி பெறும் வரை கோரமண்டல் ஆலை இயங்கக்கூடாது என அதன் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டதை அடுத்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.