திடீரென அதிகமாக மழை பெய்யும் போது கால்வாய், கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியே மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதுபோன்ற சூழலில் கூடுதலாக பம்புகளை பொருத்தி மழைநீர் வெளியேற்றப்படும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாரிமுனை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், சென்னையில் 800 ஆக இருந்த தாழ்வான பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 37 ஆக குறைந்துள்ளதாக கூறினார்.
மெரினாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கடற்கரை தூய்மைப்பணியில் பங்கேற்ற ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் 6 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் குப்பையை கையாண்டு வருவதாக தெரிவித்தார். தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக மக்கள் அதிலுள்ள சவால்களை புரிந்து கொள்கின்றனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.