நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரான திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, விசாரணையில் இருந்து பாதியிலேயே கோபத்துடன் வெளியேறினார்.
மக்களவையில் அதானி குறித்து கேள்வி கேட்க ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தினியிடம் பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தன்னிடம் தனிப்பட்ட முறையில் கண்ணியக்குறைவான கேள்விகள் கேட்கப்பட்டதால் விசாரணையில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாக மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
அவருக்கு ஆதரவாக, விசாரணைக் குழுவின் உறுப்பினர்களான டேனிஷ் அலி, கிரிதாரி யாதவ், உத்தம் குமார் ரெட்டி ஆகியோரும் வெளியேறினர்.
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில் விசாரணைக் குழுவின் தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான வினோத்குமார் சோன்கர் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.