மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் போர்விமானங்களின் திறனை சோதிக்கும் பெண் விமானிகள் அல்லது பெண் விஞ்ஞானிகளை அனுப்ப இஸ்ரோ விரும்புவதாக அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
மனிதர்களை விண்கலம் மூலம் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பி, 3 நாட்கள் ஆய்வு செய்து பின் மீண்டும் அவர்களை பத்திரமாக திரும்ப அழைத்து வரும் நோக்கில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் குறித்து விளக்கிய சோம்நாத், சோதனை முயற்சியாக ஆளில்லா ககன்யான் விண்கலத்தில் ஹியூமனாய்டு ரோபோவை அடுத்த ஆண்டு விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும், அது குறுகிய கால ஆய்வுத் திட்டமாக இருக்கும் என்றும் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, ககன்யான் திட்டத்தின் சோதனைக் கலனில் பொருத்தப்பட்டிருந்த கேமரா எடுத்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. ராக்கெட்டில் இருந்து சோதனைக் கலன் பிரிந்தது பற்றியும், கலனில் இருந்து பாராசூட் விரிந்தது குறித்தும் அதில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.