லாங்க் டிரைவ் செல்லும் பைக்கர் போல நடித்து ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விநியோகித்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தனிப்படையினருக்கு, ஒருவர் டூவீலரில் வந்து விநியோகம் செய்வது தெரிய வரவே சி.சி.டி.வி பதிவு மூலமாக நடமாட்டத்தை கண்டறிந்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபின் என்பவரை மடக்கிப் பிடித்தனர்.
சோதனைச் சாவடிகள் இருக்கும் பகுதிகளுக்கு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே தனது பைக் உடன் காத்திருக்கும் சிபின் கும்பலாக லாங் ட்ரைவ் செய்யும் இளைஞர்கள் அவ்வழியாக வரும்போது அந்த கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்.
இதனால் சோதனை சாவடியில் பெரிதாக சந்தேகம் வராமல் கூட்டத்தோடு கூட்டமாக தப்பித்து வந்துள்ளார். போலீஸார் சிபினிடம் விசாரித்துக் கொண்டிருந்த போதே கஞ்சா கேட்டு செல்போனில் தொடர்புக் கொண்ட மணலி சிவா என்பவரையும் காவல் நிலையத்திற்கு அருகில் வரவழைத்து போலீசார் அவரையும் தூக்கிச் சென்றனர்.