மத பழக்க வழக்கங்களில் தெரியாமல் புழக்கத்தில் உள்ள சில மோசமான நடைமுறைகளைக் களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரையே ஏன் வேரறுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவாரூர் அரசுக் கல்லூரியில் வெளியிடப்பட்ட சனாதனம் தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, சனாதனம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என பல கடமைகளின் தொகுப்பு என விளக்கமளித்தார்.
சாதியவாதத்தையும், தீண்டாமையையும் சனாதனம் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுவதாகவும், தீண்டாமையை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அனைத்து குடிமக்களும் சமமானவர்களே எனவும் நீதிபதி தெரிவித்தார்.
தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ-மாணவியரை கல்லூரிகள் ஊக்குவிக்கலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி சேஷசாயி, ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை என்றும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்நக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.