கொரோனா இறப்பு விகிதத்தை விட நிபா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆயிரத்து 80 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களில் 624 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்துகள் வாங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமை இயக்குநர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் 2 முதல் 3 விழுக்காடு வரை இருந்த இறப்பு விகிதம் நிபா வைரசால் 40 முதல் 70 விழுக்காடு வரை இருப்பதாகவும் தெரிவித்த ராஜீவ் பால், இந்த நோய்த்தொற்று வவ்வால்களிடமிருந்து பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.