அதானி குழுமம் பங்கு முதலீடுகளில் முறைகேடு செய்துள்ளதாக ஓசிசிஆர்பி என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதானி குழுமம் அதனை மறுத்துள்ளது.
பழைய குற்றச்சாட்டுகளே மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும பங்குகளில் மறைமுகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட அறிக்கைகள், அதானி குழுமத்தின் உள்நிறுவன மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த முறைகேடு கண்டறியப்பட்டதாக ஓசிசிஆர்பி அமைப்பு தெரிவித்துள்ளது.
குறைந்தது இரண்டு வர்த்தகங்களில் அதானி குடும்ப உறுப்பினர்கள் அல்லது வர்த்தக் கூட்டாளிகள் மறைமுக நிதியை பயன்படுத்தி, அதானி குழும நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வாங்கி விற்பனை செய்துள்ளதாக ஓசிசிஆர்பி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் மூலம் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று பெரும் சரிவுக்கு உள்ளாகியுள்ளன. ஏற்கெனவே, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி, அதன் காரணமாக லட்சக்கணக்கான கோடி ரூபாய் மூலதனத்தை அதானி குழும நிறுவனம் இழந்தது குறிப்பிடத்தக்கது