சென்னையில், கடன் தொல்லையால் 6 வயது மகளை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
அயனாவரத்தைச் சேர்ந்த கீதாகிருஷ்ணன் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மைபணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
கீதா கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு பல பேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தோர் நெருக்கடி கொடுத்ததால் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள கீதா கிருஷ்ணன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கீதா கிருஷ்ணன் மூத்த மகள் குணாலினிஸ்ரீயின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்ட நிலையில், மனைவி கல்பனாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கீதா கிருஷ்ணன் தற்கொலை முடிவிலிருந்து மனம் மாறி இளைய மகள் மானசாவுடன் திருப்பதிக்கு தப்பிச்சென்ற நிலையில் அவர் சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் வந்து மீண்டும் பலரிடம் கடன் வாங்கிய கீதாகிருஷ்ணன், தான் வசித்து வந்த வீட்டை ஒருவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு லீசுக்கு விட்டுள்ளார்.
ஆனால், வீட்டை காலி செய்து கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லையென கூறப்படுகிறது.
வீட்டை லீசுக்கு எடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் மகளை கழுத்தை நெறித்து கொன்று விட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.