புகுஷிமா அணு உலையில் இருந்து கதீர்வீச்சு நீரை கடலில் கலக்கும் ஜப்பானின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹாங்காங், அந்நாட்டில் இருந்து சில கடல் உணவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது.
பின்னர், அது மூடப்பட்டதால், அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சு நீரை சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்தது. இதற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
வரும் 24ஆம் தேதி முதல் கதிரியக்க தண்ணீரை ஜப்பான் கடலில் வெளியேற்ற உள்ளதால், அன்றைய நாளில் இருந்து கடல் உணவுகளின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக ஹாங்காங் அறிவித்துள்ளது.
ஜப்பானின் செயல் பொறுப்பற்றது என கண்டனம் தெரிவித்த ஹாங்காங், இதனால் உணவுப் பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படுவதுடன்,கடலில் சீர்படுத்த முடியாத மாசு ஏற்படும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.