சென்னையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். வள்ளுவர்கோட்டம் அருகே காய்கறிக் கடைக்குச் சென்ற முதியவர் ஒருவர், புதிய மூன்று ஐநூறு ரூபாய் தாள்களைக் கொடுத்துள்ளார்.
அதை வாங்கியக் கடைக்காரர் தினேஷ், கள்ளநோட்டு என்பதை அறிந்து போலீஸுக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.
போலீசார் விரைந்து சென்று முதியவரை கைது செய்து விசாரித்ததில், அவர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என்பது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின்பேரில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் என்பவரது வீட்டிற்குச் சென்று அவரையும் கைது செய்தனர்.
அங்கிருந்து, கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளை கைப்பற்றிய போலீசார், கோடீஸ்வரன் என்ற பெயரில் விளம்பரப் படம் எடுப்பதற்காக இந்த நோட்டுகளை அச்சடித்ததாகவும், அச்சடித்துக் கொடுத்த வடபழநியைச் சேர்ந்த குமார் என்பவரையும் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.