நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கருவி வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் உந்தித்தள்ளப்பட்டது. தொடர்ந்து நிலவு சுற்றுப்பாதையின் தொலைவு பல்வேறு கட்டங்களாக குறைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், விண்கலத்தின் உந்து கலத்தில் இருந்து, லேண்டர் எனப்படும் நிலவில் தரையிறங்க உள்ள சாதனம், பிற்பகல் 1.15 மணியளவில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, நாளை மாலை 4 மணியளவில் லேண்டர் கருவியின் சுற்று வட்டப்பாதை உயரம் குறைக்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த விக்ரம் லேண்டர் கருவி நிலவின் தென் துருவத்தில் வரும் 23-ம் தேதி சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்டதும், அதிலிருந்து பிரக்யான் ரோவர் என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.