இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வருகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 13-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டிய நிலையில், 14-ம் தேதி சிம்லாவின் சம்மர் ஹில், கிருஷ்ணா நகர், ஃபாக்லி ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 21 பேர் மண்ணில் புதைந்தனர். அவர்களில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளோரை தேடும் பணி நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது.
சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 120 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அனைத்து உடல்களையும் இன்று மாலைக்குள் மீட்க முயற்சி மேற்கொண்டு வருவதாக சிம்லா காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 70-ஐ தாண்டியதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.