துபாயில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி பெண் ஒருவரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ராதா என்ற பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட டெலிகாலர் ஒருவர் ஆழ்வார்ப்பேட்டையில் இயங்கிவரும் டி.ஜி. பட் இன்போ டெக் என்ற ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றிவருவதாக கூறிய அவர்,1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் வாரா வாரம் 6ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதனை நம்பிய ராதா முதற்கட்டமாக 1 லட்ச ரூபாய் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அவருக்கு வாரந்தோறும் 6ஆயிரம் ரூபாயை அந்நிறுவனம் கொடுத்துள்ளது.
சரியான முறையில் இரட்டிப்பாக பணம் தருவதை நம்பிய ராதா பல தவணைகளாக பல லட்சம் அந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக பெற்று வந்துள்ளார்.
மீண்டும் தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், துபாயில், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்து இரண்டே மாதங்களில் 2 லட்ச ரூபாய் லாபம் பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.
அதை நம்பி 25 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்த ராதா, கூறியபடி பணம் வராததால் ஆழ்வார்பேட்டைக்கு சென்று பார்த்தபோது நிறுவனத்தை மூடிவிட்டு ஊழியர்கள் தலைமறைவானது தெரியவந்தது.