மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மனித குலத்திற்கு எதிரான கொடூரமான குற்றம் என முதலமைச்சர் பைரன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். குற்றவாளிகள் அனைவரும் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று முதமைச்சர் பைரன் சிங் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் மனிதாபிமானமற்ற செயல் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் பைரன் சிங்கிடம் பேசியுள்ளதாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முயற்சி ஒருபோதும் கைவிடப்படாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஹீராதாஸ் என்ற 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.