காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி காலமானார். அவருக்கு வயது 79. உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த பணிவான மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தலைவர் உம்மன் சாண்டி என புகழாரம் சூட்டியுள்ளார். இருவரும் முதலமைச்சர்களாக இருந்தபோது நடத்திய உரையாடல்களை நினைவு கூர்வதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும், பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெங்களூருவில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரிசில் நீண்ட காலம் பணியாற்றிய உம்மன் சாண்டி, நேர்மையான தலைவராக இருந்ததாகவும், அவரது இழப்பு நாட்டிற்கும், குறிப்பாக கேரளாவுக்கும் பேரிழப்பு என்று மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.